19-ம் நூற்றாண்டில் சார்லஸ் பேபேஜ் இயந்திரப் பொறியாக வடிவமைத்த கணினியில் தொடங்கி, அதைத் தொடர்ந்து வந்த மின்பொறிக் கணினிகள் எனத் தொடர்ந்து, டிஜிட்டல் வடிவில் தயாராகும் இன்றைய கணினிகள் வரை ஒரே அடிப்படை கொண்டவையே. தகவல் என்பதை சேமிக்கவும், அதைக் கூறு போட்டுத் தீர்வுகள் செய்யவும் பைனரி என்ற அடிப்படை நியதியைப் பயன்படுத்தலாம் என்பதுதான். பைனரி நியதியில் இரண்டே எண்கள் - பூஜ்யம் மற்றும் ஒன்று. இயந்திரப் பொறி வடிவில் இருக்கும் கணினியில் சுவிட்சுகள் ஆன் (On), ஆஃப் (Off) என்பது இதன் அடிப்படை என்றால், டிஜிட்டல் வடிவக் கணினிகளில் அதற்கு நிகரான மின்னணு வடிவில் தகவலைப் பரிமாறிக்கொள்கிறோம். கடந்த 50 வருடங்களாக கணினிகளின் வலு தொடர்ந்து அதிகரிக்கக் காரணம், குறைந்த அளவு இடத்தில் அதிக அளவில் பூஜ்யம்/ஒன்று-களைச் சேமிக்க வைக்கும் தொழில்நுட்பத்தை உயர்த்தியபடி இருக்கிறோம் என்பதுதான்.
குவாண்டம் கணினி என்பது மேற்படி வகையறாவில் வராது. அதன் அடிப்படை நியதியே வேறு. குவாண்டம் இயற்பியல், அணுவிற்குள் இருக்கும் குவாண்டம் துகள்களைப் (Quantum particles) பற்றி ஆழமாக அறிந்துகொள்ள உதவுகிறது. அதைக் கணினி வடிவமைப்பில் பயன்படுத்தித் தயாரிக்கச் செய்யும் முயற்சிதான் குவாண்டம் கணினி. இன்றிருக்கும் கணினிகளைப் போலவே, குவாண்டம் கணினிகளும் ஒன்று/பூஜ்யம் என்ற பைனரி வடிவத்தையே பயன்படுத்துகின்றன. ஆனால், அதைத் தாண்டி க்யூ-பிட் (Qubit) எனப்படும் மூன்றாவது நிலையும் பயனாகிறது. சூப்பர் பொசிஷன் (Superposition) என அழைக்கப்படும் இந்த நிலை ஒன்று அல்லது பூஜ்யத்தை அனுமதிக்கிறது. பைனரி என்ற நியதியின் அடிப்படையில் மட்டுமே தகவலைப் பகுத்து ஆராய்கையில், சேகரிக்கப்பட்ட தகவலைத் தொடர்ச்சியாகப் படித்துப் புரிந்துகொள்ள முடியும். சூப்பர் பொசிஷன் என்ற இந்த இரண்டுங்கெட்டான் க்யூ-பிட் இருப்பதால், தகவலை கிரகிக்கும் நேரம் நான்கு மடங்கு அதிகமாகிறது. இப்படி வடிவமைப்பதன் மூலம் கணினியின் வலுவைப் பல கோடி மடங்கு அதிகரிக்க முடியும். பல்வேறு தகவல் புள்ளிகளை ஒருங்கிணைத்து சிறந்த பதில் பெற வேண்டிய சிக்கல்களை குவாண்டம் கணினி படுவேகமாகத் தீர்த்துவைக்கும்.
செஸ் விளையாட்டுப் பிரியர்களுக்கு இந்த வரலாற்றுச் சம்பவம் நினைவிருக்கலாம். மாஸ்டர் சேம்பியனான கேரி காஸ்பரோவை, ஐபிஎம் நிறுவனம் தயாரித்த ஆழ்நீலம் (Deep Blue) எனப் பெயரிடப்பட்ட சூப்பர் கணினி தோற்கடித்தது. காரணம், ஒரு நொடியில் இருபது கோடி செஸ் கணக்கீடுகளை ஆழ்நீலத்தால் செய்ய முடிந்தது. குவாண்டம் கணினியால் நொடிக்கு ஒரு லட்சம் கோடி கணக்கீடுகளைச் செய்ய முடியும்.
“கேட்க நல்லாதான் இருக்கு! கடைக்குப் போய் நாமெல்லாம் எப்ப வாங்க முடியும், அண்டன்” என்ற கேள்வி எழுகிறதா? இப்போதைக்கு சாத்தியமில்லை. மேசைகளிலும் மடிகளிலும் கைகளிலும் தவழும் தற்காலத் தலைமுறைக் கணினிகள் செவ்வக வடிவப் பெட்டி ஒன்றில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் சிலிக்கான் சிப்புகளால் இயங்குபவை. குவாண்டம் கணினிகளின் வடிவமைப்பு முற்றிலும் மாறுபட்டது. சாண்டிலியர் அலங்கார விளக்குகள்போலத் தோற்றமளிக்கும் குவாண்டம் கணினிகள் மைனஸ் 460 டிகிரி ஃபாரன்ஹைட்டில் இயக்கப்பட வேண்டும். குவாண்டம் கணினியைச் சில வருடங்களில் கொண்டுவந்து விடுவோம் என கூகுள் சொல்வது, அவர்களது குரோம் கணினிபோல தயாரித்து விற்பதற்காக அல்ல; மாறாக, அவர்களது மேகக்கணினிய சேவையாக குவாண்டம் கணினியைப் பயன்படுத்துவதாகவே இருக்கும் என்பது என் யூகம்.
ஆக்சிஜன் என்றால் சுவாசிக்க மட்டும் என்ற பொதுவான புரிதலைத் தாண்டி, ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு (Oxygen Saturation) எவ்வளவு இருக்க வேண்டும் போன்ற நுட்பமான விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது கொரோனாப் பெருந்தொற்று. மூச்சுக்காற்றில் இருக்கும் ஆக்சிஜன் ரத்தத்துடன் கலந்து உடல் முழுக்க ஆற்றலாகச் சேர்வதன் அளவீடான SpO2 என்ற ஆக்சிஜன் செறிவு பற்றி விரிவாக பல வாரங்களுக்கு முன்னால் பார்த்தோம். நுரையீரல் பாதிப்புகள் காரணமாக தாமாக மூச்சு வாங்குவதில் சிரமம் ஏற்பட்டால், டேங்கில் அடைக்கப்பட்டிருக்கும் ஆக்சிஜனை (Liquid Medical Oxygen, சுருக்கமாக, LMO) பீய்ச்சி அடித்து நுரையீரலுக்குக் கொண்டு செல்லும் வழிமுறை அடுத்த ஸ்டெப். அதிலும் SpO2 அளவை முன்னேற்றாவிட்டால், வெண்டிலேட்டர் சாதனம் கொண்டு, தொண்டைக்குள் குழாயை அழுத்தி ஆக்சிஜனை உட்செலுத்தி நுரையீரலை இயங்க வைப்பது கடைசி ஸ்டெப். ஆக்சிஜன் இல்லாமல் உடல் தவிக்கும் நிலையை hypoxia என அழைக்கிறார்கள்.
வெளியிலிருந்து கொடுக்கப்படும் துணை ஆக்சிஜன் (supplemental oxygen) பற்றிய ஆராய்ச்சிகள் ஏதேனும் நடந்துவருகின்றனவா என்பதைப் பற்றி அறிவியல் மற்றும் மருத்துவ சஞ்சிகைகளைப் பார்த்தேன். ஓர் ஆராய்ச்சி நம்பிக்கை கொடுப்பதாக இருக்கிறது. தண்ணீரில் வாழும் பல உயிரினங்கள் தண்ணீர்ப் பரப்பிற்கு மேல் வந்து தங்கள் வயிற்றில் உறிஞ்சி எடுத்துக்கொள்ளும் காற்றிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கின்றன. மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கு அப்படி வயிற்றில் இருக்கும் காற்றைப் பகுத்தெடுத்துப் பயன்படுத்தும் வசதி இல்லை. ஆனால், எலிகளையும், பன்றிகளையும் வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று நம்பிக்கை தருகிறது. ஆக்சிஜன் இல்லாத இடத்தில் வைக்கப்பட்ட இந்த விலங்குகளுக்கு பெர்ஃப்ளூரோகார்பன் எனப்படும் திரவங்களுடன் அழுத்தப்பட்ட ஆக்சிஜனை ஆசனவாய் மூலம் கொடுக்கும்போது, அதைப் பகுத்தெடுத்து ரத்தத்தில் ஏற்றிக் கொண்டு உயிர்வாழ்கின்றன. டோக்கியோ மருத்துவப் பல்கலைக்கழகம் இந்த ஆராய்ச்சியின் முன்னணியில் இருக்கிறது. EVA (enteral ventilation via anus) எனப் பெயரிட்ட இந்த ஆராய்ச்சியின் பலனை மனிதர்களுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான சோதனைகள், இதன் பக்க விளைவுகள் போன்றவற்றை உணர்ந்துகொள்ள சில காலம் பிடிக்கும்.